''எலி வால் என்று நினைத்துத்தான் முதலில் இழுக்க ஆரம்பித்தேன். இழுத்த பிறகுதான் இது எலி இல்லை, பல தலைகளைக் கொண்ட பயங்கர அரக்கன் என்று தெரிந்தது...'' என்று சொல்லும் 55 வயது ருடால்ஃப் எல்மர், கடந்த 17-ம் தேதி லண்டன் மாநகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கிறவர்களின் தகவல்கள் அடங்கிய இரண்டு சி.டி-யை 'விக்கி லீக்ஸ்' இணையதளத்தின் ஜூலியன் அசாஞ்சே வசம் கொடுத்தவர் இவர். ''இந்தக்கறுப்புப் பண முதலைகளின் பெயர்களையும் அவர்கள் பெயரில் எத்தனை கோடி ரூபாய் 'ஜூலியஸ் பே(ய)ர்’ என்ற சுவிஸ் வங்கியில் இருக்கிறது என்ற உண்மைகளையும் உங்கள் இணைய தளத்தில் வெளியிடுங்கள்!'' என்று சொல்லி இருக்கிறார்.
இது அப்படியே தொலைக்காட்சியிலும் வெளியாக... உலகம் முழுவதும் உள்ள கறுப்புப் பண பெருச்சாளிகள் வெலவெலத்துக் கிடக்கின்றன!
'ருடால்ஃப் எல்மர் ஒரு பைத்தியம்... உளறிக் கொட்டுகிறார்’ என்று வசைபாடும் ஜூலியஸ் பே(ய)ர் வங்கியின் அதிகாரிகள்கூட உள்ளுக்குள் உதறலோடுதான் இருக்கிறார்கள். காரணம், எல்மர் யாரோ ஒரு வழிப்போக்கர் இல்லை. அந்த வங்கியில் பல ஆண்டு காலம் வேலை பார்த்தவர். இந்த வங்கியின் உள்குத்து, கபட வேலைகள் எல்லாம் நன்றாகத் தெரிந்தவர். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வங்கியின் கேமெண்ட் தீவு கிளையில் இவர் வேலை பார்த்தபோது, ''பிரைவஸி என்ற பெயரில், 'ஊர் சொத்தைக் கொள்ளையடித்து உலையில் போடுவது மாதிரி’ இந்த வங்கியில் பலர் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள்!'' என்று தன் மேல் அதிகாரிகளுக்குச் சொன்னாராம். அப்போதே அந்த வங்கி இவருக்குப் பைத்தியக்காரப் பட்டம் கட்டி, கல்தா கொடுத்தது. இருந்தாலும் தன் கையில் இருக்கும் தகவல்களை எடுத்துக்கொண்டு அவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வருமானவரித் துறைகளின் கதவுகளை மூன்று ஆண்டு காலம் இடைவிடாமல் தட்டிவந்தார்.
'எல்மரைக் கைது செய்தால் பேச்சு சுதந்திரத்துக்கு வேட்டு வைக்கிறோம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடுமோ?’ என்று அஞ்சிய சுவிஸ் அரசாங்கம், வேறு வழியில்லாமல் கடைசியில் 'வங்கியின் ரகசியத்தை மீறுகிறார் இவர்’ என்று ஒரு காரணம் காட்டி ஒரு மாத காலம் சிறையில் அடைக்கவும் செய்தது. ஆனால், எல்மர் அதன் பின்பும் ஓயவில்லை! பணத்தைக் கொடுத்து அவர் வாயைக் கட்டவும் வங்கி தரப்பு முயற்சித்ததாம். ஆனால், மனுஷர் அசைந்து கொடுக்கவில்லை. வருமான வரி அதிகாரிகள், பத்திரிகைகள், பல்கலைக்கழகங்கள் என்று தன் கையில் இருக்கும் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தார்.
ஆனால், சுவிஸ் நாட்டில் உள்ளவர்கள் எல்மரைப் பொருட்படுத்தவில்லை. அதனால் கடைசியாகத்தான் அவர் விக்கி லீக்ஸ் இணையதளத்தை அணுகினார். ஜூலியன் அசாஞ்சேவுடன் சேர்ந்து அவர் நிருபர்களை சந்தித்த இரண்டே நாளில், 'வங்கி ரகசியத்தை வெளியிட்டார்’ என்று அவருக்கு சில லட்சங்கள் அபராதம் விதித்தனர்.
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிவைத்து இருக்கும் இந்தியர்களின் விவரங்களை இப்போது இந்திய சேனலுக்குக் கொடுத்துள்ளார் எல்மர். ''அன்னபூரணா என்ற பெயருடன் ஆரம்பிக்கும் மூன்று கம்பெனிகளின் பெயர்களில் முறையே
அதேபோல, ''அஷத் அலி கான் என்ற ஒரு இந்தியர், மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான கேமெண்ட் தீவுகளில் இருக்கும் ஜூலியஸ் பே(ய)ர் கிளையில் பெரும் பணத்தைப் பதுக்கியுள்ளார். ஆனால், இங்கே நான் குறிப்பிடும் அன்னபூரணாவும் சரி, அஷத் அலியும் சரி... இந்தப் பணத்துக்கு முழு சொந்தக்காரர்கள் என்று சொல்ல முடியாது. இவர்கள் வேறு யாருடைய பினாமியாகவும் இருக்கலாம். மேலும் இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பண முதலைகளின் பணத்தை தன் வங்கிக்கு டெபாசிட்டாகக் கொண்டு செல்ல, இந்தியாவில் ஒரு தனி அதிகாரியையே - புரோக்கர் போல - இந்த வங்கி நியமித்து இருந்தது...'' என்றும் எல்மர் சொல்லி இருக்கிறாராம்.
இந்த கலாட்டாவுக்கு நடுவில், லீஷ் என்ஸ்டைன் என்ற ஐரோப்பா குட்டி நாட்டு வங்கியில் பணம் போட்டுவைத்து இருக்கும் 26 இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு கவரை இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது! அது எப்போது பிரிக்கப்படும்? உண்மை எப்போது வெளியே வரும்?
ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்!












அண்மையில் சரவதேச ஒரு நாள் போட்டிகளில் நூறாவது சதத்தை அடித்து சாதனை படைத்த சச்சின்