தெற்கு சீனா கடற்பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை மேற்கொள்ளும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, இந்தியாவுடைய வெளி விவகாரங்களில் அடிக்கடி தலையிட்டு வருகிறது. அருணாசல பிரதேச மாநிலத்தை, தங்களுக்கு உரியது என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு சீனா கடலில் வியட்னாம் நாட்டிற்கு சொந்தமான பகுதியில் எண்ணெய் துரப்பண பணி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியா-வியட்னாம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. தற்போது, இந்தியா அந்த பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதுகுறித்து, சீன வெளியுறவுத்துறையின் ஆசிய துறைக்கான துணை இயக்குனர் ஜெனரல் சன் வெய்டாங் கூறியதாவது:-
தெற்கு சீன கடற்பகுதி பல நாடுகளுடைய எல்லை தகராறு சம்பந்தப்பட்ட சர்ச்சைக்கு உரிய ஒரு பகுதி. அந்த பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை மேற்கொள்வது இந்தியாவுக்கு நல்லது கிடையாது. இங்குள்ள விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவிடம் கூறி இருக்கிறோம்.
இந்த பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பண நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருவது மிகவும் சிக்கலான விஷயம். இந்த பிரச்சினைக்கு அமைதியான வழியில் தீர்வு ஏற்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. எனவே, சர்ச்சைகள் நீங்கி தீர்வு ஏற்படும் வரை இந்த பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டாம்.
இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிடையேயும் பொதுவான வளர்ச்சியையே நாங்கள் விரும்புகிறோம். எனவே, இங்குள்ள சர்ச்சைகளில் இந்திய அரசு தலையிடாது என்றும், இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு சன் வெய்டாங் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கட்டமைப்பு நடவடிக்கைகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்து அவர் கூறுகையில், "இந்த 2 விஷயங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் சீனாவின் கொள்கையில் எந்த விதமான மாற்றமும் கிடையாது. அதனை இந்தியா, பாகிஸ்தான் 2 நாடுகளும் மட்டுமே தீர்த்துக்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு மட்டுமே சீன நிறுவனங்கள் கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை எந்த நாட்டிற்கும் எதிரானது கிடையாது. அதே சமயம், தெற்கு சீன கடற்பகுதியில் இந்தியாவின் நடவடிக்கையானது மிகவும் சிக்கலான ஒன்று. இதில் பல நாடுகள் சம்பந்தப்பட்டு உள்ளன" என்று தெரிவித்தார்.