"தீபன் பக்கங்கள்"

தாயை விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிளமண்ட் ஜோசப்ராஜ், தொழில் அதிபர். இவருடைய மனைவி ரோஸ்மேரி (வயது 56). இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவர்களில் 3-வது மகன் வினோஜ் பெல்ட்டன் (32). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு.
வினோஜ் பெல்ட்டனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் சினிமாபட தயாரிப்பு பணியில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் இவர்களுக்கு சொந்தமான சொகுசு காரின் ஆர்.சி. புக்கை வினோஜ் பெல்ட்டன் தந்தையிடம் கேட்டார். அப்போது, ஆர்.சி. புக்கை கொடுக்க தாய் ரோஸ்மேரி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வினோஜ் பெல்ட்டன் அரிவாளுடன் தாயை வெட்ட முயன்றார். உடனே, ரோஸ்மேரி வீட்டின் கதவை திறந்து உயிருக்கு பயந்து ஓடினார். பின்னால் வெறி பிடித்தவன் போல் வினோஜ் பெல்ட்டன் துரத்தினார்.
சாலையில் சிறிது தூரம் ஓடியதும் ரோஸ்மேரி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் அரிவாளுடன் துரத்தி வந்த வினோஜ் பெல்ட்டன், தனது தாயை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரோஸ்மேரி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அப்போது, அருகில் நின்றவர்கள் வினோஜ் பெல்ட்டனை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்குள் அவர் சொகுசு காரில் ஏறி தப்பி சென்றார்.
இது குறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வினோஜ் பெல்ட்டன் தப்பி சென்ற கார் குறித்த விவரங்களை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவித்தனர். பின்னர் ஆரல்வாய்மொழி பகுதியில் காரில் சென்ற போது, வினோஜ் பெல்ட்டனை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

Loading