திபெத் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்தும், 'பிரிக்ஸ்' நாடுகளின் மாநாட்டிற்காக இன்று இந்தியா வர உள்ள, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று திபெத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்குளித்தார். பற்றி எரியும் ஜூவாலையுடன் அவர் அங்குமிங்கும் ஓடிய காட்சி காண்போரைப் பதற வைத்தது.
திபெத் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்தும், தலாய் லாமா தனது சொந்த பூமிக்குத் திரும்பக் கோரியும், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இதுவரை 30 பேர் தீக்குளித்துள்ளனர். இத்தீக்குளிப்பு சம்பவங்கள் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' அமைப்பின் கூட்டம் டில்லியில் நடக்க உள்ளது. இன்று சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ வர உள்ளார். அவரது வருகையை எதிர்த்தும், திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை கண்டித்தும், நேற்று பார்லிமென்ட் அருகில் உள்ள சென்ட்ரல் பிளாசா பகுதியில், 600 திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, ஜம்பா யெயி(27), திடீரென தன் மீது தீயைப் பற்ற வைத்துக் கொண்டார். விறுவிறுவென அவர் மீது பற்றிய தீப் பிழம்புகளுடன் அவர் அங்குமிங்கும் ஓடினார். இரு நிமிடங்கள் இவ்வாறு அவர் பரிதவித்த பின், அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் மீது திபெத் கொடியை போர்த்தியும், தண்ணீரை ஊற்றியும், நெருப்பை அணைத்தனர்.
எனினும் அவர் உடலில் 85 சதவீதம் நெருப்பால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். எனினும், பின்னர் போலீசார் அவர்களை விலக்கி, யெயியை சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர். யெயி தற்போது மிகவும் அபாயமான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர், 2006ல் திபெத்தில் இருந்து தப்பியோடி வந்து, டில்லியில் வசித்து வருகிறார். இத்தகைய தீக்குளிப்பு டில்லியில் இது இரண்டாவது முறையாகும். கடந்தாண்டில் டில்லியில் உள்ள சீனத் தூதரகத்தின் முன் ஒருவர் தீக்குளித்தார். எனினும் சிறு காயங்களுடன் அவர் பிழைத்து விட்டார்.

0 comments:
கருத்துரையிடுக