ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி நாட்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ஆட்சியை கைப்பற்றி விட்டதாக ராணுவத்தினர் அறிவித்தனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜிரியா அருகே மாலி நாடு அமைந்துள்ளது. இது தங்கம் மற்றும் பருத்தி வளம் கொண்ட நாடாகும். இதன் ஜனாதிபதியாக அமாடோவ் துமானி தோரி பதவி வகித்து வருகிறார். இந்த நாட்டில் வடக்கு பகுதியில் துக்ரீக் என்ற கிளர்ச்சி இயக்கத்தினர் ராணுவத்திற்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இவர்களை ஒடுக்க ராணுவத்திற்கு நவீன ஆயுதங்களை வழங்க அரசாங்கம் தவறி விட்டதாக ராணுவத்தினர் ஆதங்கப்பட்டனர். இதனை அடுத்து கேப்டன் அமாடோவ் சானோகோ தலைமையில் 'ஜனநாயகத்தை மீட்கும் தேசிய கமிட்டி' என்ற புதிய அமைப்பு ஒன்றை ராணுவத்தினர் ஏற்படுத்தினார்கள். அரசுக்கு ஒரு வாரம் கொடு கொடுத்தனர். ஆனாலும் ராணுவத்தினருக்கு ஆயுதம் வழங்கப்படவில்லை.
எனவே, இந்த அமைப்பை சேர்ந்த ராணுவ வீரர்கள் திடீரென்று தலைநகர் பாமகோவில் புரட்சியில் ஈடுபட்டனர். வீதிகளில் துப்பாக்கியால் சுட்டபடி ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்று தாக்குதல் நடத்தினர். அங்கு இரவு முழுவதும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால் பொதுமக்கள் சிதறி ஓடி வீடுகளில் பதுங்கினார்கள்.
தலைநகரில் உள்ள தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிலையங்களை ராணுவத்தினர் கைப்பற்றினர். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட்டதாக தொலைக்காட்சியின் மூலம் அறிவித்தனர்.
இது பற்றி புரட்சி நடத்திய ராணுவ அமைப்பின் செய்தி தொடர்பாளர் கோனாரே வெளியிட்ட அறிக்கையில், 'நாட்டை அச்சுறுத்தும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தவறி விட்டதால் புரட்சி நடத்தப்பட்டது. அரசியல் சட்டம் கலைக்கப்பட்டு விட்டது. விரைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும்' என்று தெரிவித்தார்.
அத்துடன் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நேற்று அரசு அலுவலங்கள் திறக்கப்படாமல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. தலைநகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டதால் விமானங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன.
ஜனாதிபதி துமானி தோரி எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை ராணுவத்தினர் வெளியிடவில்லை. புரட்சி வெடித்ததும், ஜனாதிபதி தனது மாளிகையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
ராணுவ புரட்சி ஏற்பட்டதை அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். அதே நேரத்தில் ஜனாதிபதி பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பதவி இழந்த ஜனாதிபதி 1991-ல் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியவர். பின்னர் 2002-ல் தேர்தல் நடத்தி 2 முறை ஆட்சிக்கு வந்தவர். அடுத்த மாதம் தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில் அவர் ஆட்சியில் இருந்து ராணுவத்தால் விரட்டப்பட்டு உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையின் போது 100 வீரர்களை பிடித்து சென்று விட்டனர். இவர்களது கதி என்ன? என்று இன்னும் தெரியவில்லை. ராணுவத்திற்கு பெரிய இழப்புகள் ஏற்பட்டதுடன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் 2 லட்சம் மக்கள் அகதிகளாக வெறியேறினர்.
இதனால் ராணுவத்தினர் கொதிப்படைந்தனர். இவர்களை சமாதானப்படுத்த புதிதாக நியமிக்கப்பட்ட ராணுவ மந்திரி சடியே கசாமா என்பவர் காதி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்றார். அவரை பார்த்ததும் ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எங்களுக்கு நவீன ஆயுதம் தாருங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களை சமாதானம் செய்ய முடியாமல் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதனை அடுத்து திடீர் புரட்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

0 comments:
கருத்துரையிடுக